NEWS

Monday, June 4, 2012

ஊழலாகும் வருங்கால இந்திய பொருளாதாரம்....

ழல் / லஞ்சத்தால் இந்தியா மிக மோசமாக கெட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதிகாரிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். மக்களின் சிரமத்தை உணர யாருக்கும் நேரமில்லை. அவரவர் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்று தான் கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். முன்பு கொஞ்சம் பயமாவது இருந்தது தற்போது அனைத்தும் எல்லை மீறி போய் விட்டது. மக்களின் பணத்தை யார் அதிகம் வீண் செய்வது என்று போட்டி வைத்தால் அதற்கு கடுமையான போட்டி நிலவும் நிலை தான் தற்போது உள்ளது.
மக்கள் ஊழலுக்கு பழகிக்கொண்டு இருக்கிறார்கள் / இருக்கிறோம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தற்போது எல்லாம் 100 கோடி ஊழல் என்றால் ஓ! அவ்வளோ தானா என்று நினைக்கும் அளவிற்கு நமது எண்ணங்கள் பழகி விட்டது / பழக்கி விட்டார்கள். உண்மையாகவே இவை எல்லாம் எங்கே சென்று முடியும் என்று பயமாக உள்ளது.
அநியாயமாக மக்களின் பணத்தை வீண் செய்கிறார்கள் ஆனால் மக்களுக்கு வரி அது இது என்று சிரமப்படுத்திக்கொண்டே உள்ளார்கள். மக்களை இவ்வளவு சிரமப்படுத்தும் அரசு அதற்கான கட்டமைப்பை சரியாக தருகிறதா என்றால் அதுவுமில்லை. திட்டமிடாத பொறுப்பற்ற செயல்களால் மக்களுக்கு சிரமத்திற்கு மேல் சிரமம் கொடுக்கிறார்கள். மக்கள் சிரமப்படுவதற்கு அரசின் நிர்வாகத்திறனைத் தான் காரணமாகக் கூற முடியும். தேவையற்ற அனாவசிய செலவுகளைக் குறைத்தாலே நிச்சயம் மக்களின் சிரமத்தைக் குறைக்கலாம். ஆனால் அதில் யாருக்கும் அக்கறை இருப்பது போல தெரியவில்லை.
நீங்கள் சமீபமாக நிச்சயம் கேள்விப்பட்டு இருப்பீர்கள் நமது ஜனாதிபதி பிரதீபா பாட்டில் உலக நாடுகளை சுற்றிப் பார்த்து வந்த செலவு மட்டுமே 250 கோடியைத் தாண்டுகிறது. ஜனாதிபதி சுற்றுப்பயணம் என்பது தவிர்க்க முடியாதது என்பதை உணர முடிகிறது ஆனால் அதில் ஏற்படும் அனாவசிய செலவுகளை நினைத்தால் குறைக்க முடியும். அதை பொறுப்பில் உள்ளவர்களால் மட்டுமே செய்ய முடியும். இது வரை இருந்த ஜானாதிபதிகளிலேயே அதிக நாடுகளை சுற்றியவரும் அதிக செலவை செய்தவரும் இவர் தான் என்ற பெருமைக்குரியவர்!!
கடந்த டிசம்பர் மாதம் கடற்படை அணிவகுப்பை ஜனாதிபதி ஏற்கும் சம்பிரதாய நிகழ்ச்சிக்கு ஆனா செலவு 23 கோடியாகும். எத்தனை நாள் நடந்தது என்று தானே யோசிக்கறீங்க!… ஜஸ்ட் ஒரே நாள். இது பற்றிய தகவலை “தகவல் அறியும் உரிமைச் சட்டம்” மூலம் அகர்வால் என்பவர் கேட்டு பெற்று இருக்கிறார். இது பற்றிய விஷயம் தெரிந்ததும் பலர் கடுப்பாகி விட்டார்கள். ஏன் இதைப்படிக்கும் நீங்க கூடத்தான் கடுப்பாகி இருப்பீங்க. என்ன செய்வது? நாம கடுப்பாக மட்டுமே முடியும் வேற ஒன்றும் செய்ய முடியாது. அரசு விழாக்களில் செய்யப்படும் ஆடம்பரங்களையும் அதில் அவர்கள் அடிக்கும் கொள்ளையையும் தெரிந்து கொள்ள நேர்ந்தால் பச்சை முட்டையை விழுங்கினாலே போன வேகத்தில் உள்ளே சென்று ஆம்லெட் ஆகி விடும் அந்த அளவு வயித்தெரிச்சல் ஆகி இருப்போம்.
மீரா குமார், கடந்த 2009-ல், லோக்சபா சபாநாயகராக பதவியேற்றார். கடந்த 35 மாதங்களில், இதுவரை 29 முறை வெளிநாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பதவியேற்றதில் இருந்து இதுவரை ஒட்டு மொத்தமாக 146 நாட்கள் அவர் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், மூத்த அதிகாரிகளுடன் இந்த பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார்.
சராசரியாக 37 நாட்களுக்கு ஒருமுறை அவர் வெளிநாடு சென்றுள்ளார். மீரா குமாரின் வெளிநாட்டு பயணங்களுக்காக 9.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தன்னை சந்தித்த விருந்தினர்களை கவுரவிப்பதற்காக 11.6 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இவர் தற்போதைய ஜனாதிபதி போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஆகும் முன்பே இவ்வளவு. ஒருவேளை ஆனால்…. இதுவும் தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்து இருக்கிறது.
நமது மாநில முதல்வர் ஜெ தனது ஆட்சியின் ஓராண்டு நிறைவை ஒட்டி இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தார் அதற்கான ஒருநாள் செலவு 25 கோடி. எனக்கு புரியல இப்ப என்ன சாதிச்சுட்டாங்க என்று 25 கோடியை ஒரே நாளில் காலி செய்து இருக்கிறார்கள். முந்தைய ஆட்சி போல அடிக்கடி பாராட்டு விழா நடத்தாமல் ஒட்டுமொத்தமாக வைத்து மொத்தமாக செலவு செய்கிறார்கள். தினமும் செய்திகளில் வீட்டை உடைத்துக் கொள்ளை, வங்கிக் கொள்ளை என்று தாறுமாறாக வருகிறது. முன்பு ஜெ ஆட்சியில் இது போல குற்றங்கள் குறைவு என்று கூறுவார்கள் அது இந்த முறை அப்படியே நேர் எதிராக இருக்கிறது. பல கொள்ளைகள் இன்னும் கண்டு பிடிக்கப்படாமலே உள்ளது. இதில் என்ன சாதனை என்று புரியவில்லை அதிலும் இந்திய அளவில் விளம்பரம் செய்ய என்ன அவசியம்? பிரதமராகும் எண்ணம் தவிர வேறு என்ன இருக்க முடியும். ஆசைப்பட அனைவருக்கும் உரிமையுண்டு அதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்துவதே இங்கே கேள்வியாக உள்ளது.
ஏர் இந்தியா விமானிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இது முதல் முறை அல்ல அடிக்கடி இது போல நடக்கிறது. மத்திய அரசு வேலை நிறுத்தத்தை உடனடியாக முடிவிற்குக் கொண்டு வரும் எண்ணம் இருப்பது போலவே தெரியவில்லை. இதனால் எத்தனை பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனுடன் ஒரு நாளைக்கு எவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே பல ஆயிரம் கோடி கடனில் இருக்கும் ஏர் இந்தியா தற்போது இந்த சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டும். இதில் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் (இதில் அவர்கள் உறவினர்கள் பயணமும் சேர்த்து) ஏராளம். இதுவும் நஷ்டத்திற்கு முக்கியக்காரணம். எவனோ பணம் என்பதால் தானே ஒவ்வொருவருக்கும் இவ்வளவு அலட்சியம். பொறுப்புள்ள அரசு என்றால் இதற்கு ஒரு சரியான தீர்வு எடுத்து இருக்க வேண்டாமா!
எந்த ஒரு அரசு அலுவலகம் செல்லுங்கள் அங்கே பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது (சில விதிவிலக்கு). எந்த ஒரு கான்ட்ராக்டிலும் கமிசன். வார்டு கவுன்சிலரே MLA ரேஞ்சில் சுற்றிக்கொண்டு இருக்கிறார் (அதாவது வருமானத்திற்கு மீறிய சொத்துடன்). இதன் பிறகு MLA, அமைச்சர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. எங்கு பார்த்தாலும் ஊழல் மலிந்து விட்டது எங்கே சென்றாலும் பணம் பணம் என்று உயிரை எடுக்கிறார்கள். விலைவாசி கண்டபடி உயர்ந்து விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் இந்தோனேசியா மாதிரி பணத்தை கத்தையாகத் தான் எடுத்துக்கொடுக்க வேண்டும் போல உள்ளது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதால் தான் மக்கள் சிரமப்பட வேண்டியதாக இருக்கிறது.
என்னுடைய பணியில் யாரும் குற்றம் கூற முடியாத அளவிற்குத் தான் இதுவரை நடந்து கொண்டுள்ளேன் இனிமேலும் நடப்பேன். ஆனால் இதே பொதுவாழ்க்கை என வரும் போது இவற்றைக் கண்டு நொந்து சுயநலவாதியாகிக்கொண்டு வருகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. எல்லோருமே ஒரு கட்டத்தில் சுயநலவாதி தான் என்றாலும் எனக்கு தற்போது எதிர்மறையான எண்ணங்களை தோற்றுவித்து வருகிறது. ஊரெல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள், தாங்கள் செய்ய வேண்டிய கடமையை / பணியை சரிவர செய்ய மறுக்கிறார்கள் இதை எல்லாம் காணும் போது ஒரு இனம் புரியாத வெறுப்பு மனதில் வருகிறது. சுருக்கமாகக் கூறினால் “எவனோ எப்படியோ போகிறான்” என்ற தவறான எண்ணம் தான் அதிகம் வருகிறது. எனக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் இதுவே என்னை ஆக்கிரமிக்கிறது.
என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறீர்கள் என்றால் நீங்கள் ஒன்றை கவனித்து இருக்கலாம். முன்பெல்லாம் சமூகத்தைப் பற்றிய (அரசியல்) பதிவுகள் அதிகம் எழுதுவேன் சமீபமாக அது குறைந்து விட்டது. காரணம் புதிதாக ஒன்றுமில்லை சலிப்பு வெறுப்பு தான். நாம் ஏன் சும்மா கத்திக்கொண்டு இருக்க வேண்டும் என்கிற எண்ணம் தான். எனக்கே சில நேரங்களில் இது போன்ற பதிவுகளை எழுதும் போது காமெடியாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக இந்தப்பதிவின் முதல் பாரா நீங்கள் இதுவரை எத்தனை முறை / பதிவில் படித்து இருப்பீர்கள். பார்த்தால் உங்களுக்கே கடுப்பாக இருக்கும். அதற்கு காரணம் கேட்டுப் படித்து சலித்துப் / புளித்துப் போன வார்த்தைகள். பலர் முதல் பாரா படித்து தொடர்ந்து இருப்பார்களா என்பதே சந்தேகம். எனக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை அதனால் வேறு வழி இல்லாமல் அந்த முதல் பாரா எழுதினேன்.
இதைக்கூட எழுத எனக்கு விருப்பமில்லை ஆனால் கண் முன்னே நடக்கும் வெட்டிச் செலவுகளை பொறுப்பில் உள்ளவர்களின் அக்கறையின்மைகளைக் காண, படிக்க நேரும் போது ஏற்படும் மன உளைச்சல்களை இது போல எழுதித் தான் குறைக்க முடிகிறது. மற்றபடி வேறு ஒன்றுமில்லை.
அனைவர் மீதும் தவறு இருக்கிறது நாம் உட்பட. யாரையும் தனித்துக் குற்றம் கூறத் தோன்றவில்லை. இவற்றோடு வாழப் பழகிக்கொண்டு இருக்கிறேன் / பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.