NEWS

Saturday, April 27, 2013

உலக சினிமா ''THE IMPOSSIBLE"

மற்றவர் படும் துயரம் பார்த்து கண் முடி  இந்த உலகத்தில் வாழும் மனித இனம் சென்று இருக்குமேயானால் இந்த உலகம் எப்போதே அழிந்து  போய் இருக்கும்.
ஆனால் பிறர் படும் துயரம் பார்த்து, ஒரு சிலரை தவிர இந்த பூமியில் வாழும் 95 சதவிகித மக்கள் தன் துயரமாக நினைக்கின்றார்கள்...
உடன்குடி  சாலையில் துப்பாட்டா ரோட்டில் பிரள இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பெண்ணை எக்கேடாவது கெட்டு போகட்டும் என்று விட்டு விட முடிவதில்லை. துரத்தி போய் துப்பாட்டாவை ஒழுங்கா போட்டுக்கோ என்று சொல்கின்றோம்...  கார் கதவை சரியா சாத்தலைன்னா என்ன உயரா போய் விடும்...?? கார் கண்ணாடி கதவை  தட்டி டோர் ஒழுங்கா  சாத்தலைன்னு சொல்லறோம்..
இவ்வளவு ஏன் பைக்ல சைடு ஸ்டேன்ட்  எடுக்காம வண்டி ஓட்டறவனை  ஓத்தா எங்கயாவது வளையற எடுத்துல உழுந்து வாரி முஞ்சி மொகரை பேத்துக்கிடட்டும் என்று விட்டு விடுகின்றோமா? முக்கியமா ஹெல்மெட் போட்டு புல்லா கவர் பண்ணி இருக்கறவன் கிட்ட இந்த சைடு ஸ்டாண்ட் விளக்கி புரியவைக்கறதுக்குள்ள பொழுது விடிஞ்சிடும்...  சலுச்சிக்கிட்டாலும் சொல்லாமவா போறோம்...
இவ்வளவு ஏன் பைக்ல பகல்ல லைட்   எறிஞ்சா நாம என்ன  கரெண்ட் பில் கட்டப்போறமா? அல்லது  லைட்டு போட்டு ஓட்டபோறவன் கட்டப்போறானா? ஏதுவும் இல்லை... பட் லைட்டை நிறுத்துக்கன்னு புதிய பாதை பார்த்திபன் ஐஸ்வர்யா கிட்ட  கையால பிசைஞ்சி அழுத்தி சொல்லறது போல சொல்லலை..??? ஏன் மனிதாபிமானம்தான்...
வண்டி ஓட்டறவனுக்கு நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. ஆனா நம்ம வீட்டு மூதேவி ஒன்னு இப்படி வண்டி ஓட்டிக்கிட்டு போனா நம்மாள சும்மா இருக்க முடியுமா? காச்சி முச்சின்னு  கத்தறமே... அது போலத்தான்...நம்ம புள்ளையா இருந்தா அப்படியே விட்டு விடுவோமா?என்ற எண்ணம்தான் கொஞ்சம் பாலிஷா சக மனிதனை நேசிக்க வைக்குது...
"லூசு என்ன டிரஸ் பண்ணிருக்க இன்னைக்கு...ஒழுங்காவே இல்ல உடம்புல பாதி தெரியுது பாரு.."
 ஐயையோ...ச்சே..இன்னைக்கு  அவசரமா கிளம்பினேன்...அண்ணன் அவசரப்படுத்தினான் அவன்  திருச்செந்தூர்  போவனும்ன்னு...அதான் கண்ணாடி முன்ன கூட நிக்காம ஓடி வந்துட்டேன்... அசிங்கமா இருக்கா?
"சுடிதார் சீ துருவுல   உன் மார்ல பாதி  தெரியுது... டல் லைட்டுல  தெரியலை ... ஹார்ஷ் லைட்டுல தெரியுது.."
என்ன லைட்டோ ? அசிங்கமா இருக்கா இல்லையா?
சூரிய வெளிச்த்துல நல்லா தெரியுதுன்னேன் .
சரி ஷால் வச்சி மறைஞ்சிக்கறேன்... பக்கி மாதிரி பார்த்துக்கிட்டு இருக்காம சொல்லி  தொலைச்சியே? தேங்ஸ்...
ஏதோ பார்த்த ஒரு செகன்ட்  பக்கியா இருக்கலாம், ஆனா 24 மணி நேரமும் பக்கியா இருக்க முடியாது என்று நக்கல் விட்டேன்...  என் தோழி ஆமோதித்து புன்னகைத்தாள்... சபையில் தனக்கு தெரிந்த பெண் காட்சி பொருளாய் இருப்பதை எவர் மனமும் விரும்புவதில்லை....

முந்தாநாள் கோவை  வணிகவாளக தீயில நாலு பேர் செத்து போனாங்க.. அதுல ரெண்டு பொண்ணுங்க வயசு பொண்ணுங்க... அதுல ஒரு பொண்ணு பத்து நாளக்கு முன்னாடிதான் வேலைக்கு சேர்ந்து இருக்கு...  பொதுவா மர்டர் நடந்தா என் பார்டர் உன்பார்டர்ன்னு பிரிச்சி பேசற போலிஸ் தீயணைப்பு வீரர்களோடுகளம் இறங்கி போராடி இருக்காங்க..  போலிஸ்  பொதுமக்கள் பயர் சர்விஸ் பார்த்துக்கும்ன்னு கைய கட்டி வேடிக்கை பார்க்கலை...? அதுதான் மனிதம்.
ஈழத்துல போர் சமயத்துல மக்கள் படற  அவஸ்தைய பார்த்த போது மனசு துடிச்சி போவுதே? அது ஏன்?   காரணம் சக மனிதனா நாம எல்லரையும் நேசிக்கின்றோம்...சென்ட்டிமென்ட்டுகளால் நிறைந்தது இந்த உலகம் ..  இதில் யாரும் விதிவிலக்கில்லை...
யார் வூட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்றில்லாமல் சக மனிதர்களை நேசிக்க கற்றுக்கொடுக்கின்றது இந்த படம்... எதிர்பாராத நிலையில் நடக்கும் இயற்கை சீற்றத்தின் போது மக்கள் எப்படி இருக்க வேண்டும் என்று  உணர்ச்சிகரமாய் பாடம் எடுக்கின்றது இந்த  இம்பாசிபில் என்கின்ற ஸ்பேனிஷ்  நாட்டு திரைப்படம்.

===============
The Impossible -2012 படத்தின்  ஒன்லைன் என்ன?
சுனாமியில் சிக்கிய ஒரு குடும்பத்தின் உண்மைகதை.
=========

The Impossible -2012 படத்தின் கதை என்ன?
மருத்துவர் மரியா (Naomi Watts) தனது கணவன்ஹென்றி பென்னட் (Ewan McGregor) மற்றும் மூன்று ஆண்பிள்ளைகளோடு கிருஸ்மஸ் விடுமுறைக்கு  தாய்லாந்து வருகின்றார்கள்...2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்ப்பட்ட சுனாமி   அவர்தகளின் விடுமுறை கனவையும்,இந்த குடும்பத்தை சின்னாபின்னமாக்குகின்றது. அவர்கள்  என்னவானார்கள் என்பதே படத்தின் கதை.
================
 தமிழ்நாட்டில் சுனாமி ஏற்ப்படுத்திய தாக்கம்  கொஞ்சம் நஞ்சமல்ல.... அது எல்லோருக்கும் தெரியும்... ஆனால் நம்மவர்கள்  அதன் பின் இருக்கும் சோதனை   வேதனை கதைகளை யாரும்  காட்சிபடுத்தவில்லை.. ஆனால் கமல் அந்த சுனாமியை  தன் தசாவதாரம் திரைப்பட கிளைமாக்ஸ் காட்சிக்கு பயண்படுத்தி இருப்பார்...வேறு யாரும் தமிழ்சினிமாவில் பயண்படுத்தியதாக நினைவில்லை.. அட பிளாஷ்  பேக்குல கூட சுனாமி நடந்த அன்னைக்கு   காலைல எட்டு மணிக்கு மெரினாவுக்கு  என் காதலியை வரச்சொல்லி காதலை சொல்லறதுக்குள்ள என் காதலி கடல்ல போயிட்டான்னு எந்த ஹீரோவும்  சோகமா டெபனிஷன்  கொடுக்கலை..
உண்மை சம்பவம் இதில் என்ன சுவாரஸ்யம்  இருக்கப்போகின்றது என்று ரொம்பநாள் பார்க்காமல் இந்த படத்தின் டிவிடியை வைத்து இருந்தேன்.. படத்தை பார்த்து கண் கலங்கி பிரம்மை பிடித்து உட்கார்ந்து இருந்தேன்...

சுனாமி தாய்லாந்து கடற்கரை ஹோட்டல்களை தரைமட்டமாக்குவதை மிக தத்ரூபமாக எடுத்து இருக்கின்றார்கள்...
சனாமிக்கு பிறகு அது  ஏற்ப்படுத்திய அழிவு எப்படி இருக்கும்  என்பதை டீடெயில்லாக சொல்லி இருக்கின்றார்கள்..
சுனாமி வந்த சமயம்  இலங்கையில் ஒரு சாலை  சத்திப்பில் பேருந்து உயரத்துக்கு  கடல் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது...மூன்று பெண்கள் ஒரு கட்டிடத்தில்  நீட்டிக்கொண்டு இருந்த கம்பை பிடித்துக்கொண்டு இருந்தார்கள்… வேறு ஒரு பெண் அவர்களை வந்த பிடிக்க பிடி நழுவி தண்ணீரில்  அடித்து  சென்ற காட்சி காலத்துக்கும் மறக்காது…
 எல்லா சுனாமியையும் அடித்த சாப்பிட்டது…  இந்த நுற்றாண்டில் ஜப்பானில் ஏற்ப்பட்ட சுனாமிதான்… கார் ,பஸ், மினி கப்பல், பிளைட் என்று கபளிகரம் செய்த காட்சியை மறக்க முடியுமா?
சுனாமி தண்ணி ஏறிச்சின்னா மிதக்க வேண்டியதுதான்… என்று நினைக்காதீர்கள்  அது எப்படி சுழற்றி அடிக்கும் நகரத்தில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு  தண்ணீரில் மிதப்ப்பவர்களை அது எப்படி தாக்கும் என்பதை முதல் காட்சியில் மரியா படும அவஸ்தையில் சொல்லி இருப்பார்கள்…

மரியா (Naomi Watts) சான்சே இல்லாத நடிப்பு… ஒரு அம்மாவா தன்புள்ளைக்கு என்ன கத்து தரனும்ன்னு எப்படி தைரியபடுத்தனும்ன்னு சொல்லி கொடுக்கும் இடங்கள் அருமை.
சுயநலமாக இருக்கும் பெரிய பையன் லுகாஸ் எப்படி அவனுள் மனிதநேயம் எப்படி ஏற்ப்படுகின்றது.. அதை எப்படி அவன் அம்மா  வளர்ந்து விடகின்றாள் என்பதையும்… அம்மாவுக்கு உதவி செய்தது போக ஒரு தகப்பனையும் பிள்ளையும்  தேடி  சேர்த்து வைத்த அந்த  பெரிய பையன் லுகாசின்  நேசம் ..  சான்சே இல்லை.

கால் மெல்ல மெல்ல தன் தாயக்கு அழுகும் அந்த காட்சியும், தம்பி அப் என்னவானார்கள் என்ற பரிதவிப்பும்.. அற்புதம்… வேனில் ஆஸ்பிட்டல் ஆஸ்பிட்டலாக உறவுகளை தேடி அலையும் அந்த காட்சிகள் காலத்த்துக்கு நம் நினைவில் இருக்கும்….

Friday, April 26, 2013


உலக திரைப்படம், உலக திரைப்படம் என்கிறார்களே.. நிஜமாகவே ஒரு உலக திரைப்படம் இது !

காலில் அணியும் ஷூ. அதற்கு நாம் என்ன விதமான முக்கியத்துவம் தருகிறோம்? எங்கு போனாலும் வெளியில் விடுகிறோம். பிறர் மீது ஷூ இடித்தால் சாரி சொல்கிறோம். மிக குறைந்த மதிப்பு தானே ஷூவிற்கு? ஆனால் ஒரு ஜோடி ஷூவை வைத்து ஒரு முழு நீள சினிமா எடுக்க முடியுமா? முடியும் என நிரூபித்துள்ளார் Children of Heaven என்கிற இரானிய பட இயக்குனர் மஜீத் .


கதை 


அலியும் சாராவும் அண்ணன் தங்கை. தங்கையின் கிழிந்த ஷூவை தைக்க எடுத்து செல்லும் அலி, அதை, ஒரு காய்கறி கடை வெளியே வைத்து தொலைத்து விடுகிறான். எங்கு தேடியும் ஷூ கிடைக்க வில்லை. உடல்நிலை சரியில்லாத அம்மா. கோபக்கார அப்பா. 5 மாதமாய் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் குடும்பம். இந்நிலையில் எப்படி ஷூ தொலைந்ததை சொல்லி புது ஷூ கேட்பது என அலி தன் தங்கையை அம்மா அப்பாவிடம் இந்த விஷயம் சொல்லாதே என்று கூறி விடுகிறான்.

சாராவிற்கு காலை பள்ளி. அவள் அலியின் ஷூவை அணிந்து பள்ளி சென்றுவிட்டு, திரும்ப வந்த பின், மதியம் பள்ளி செல்லும் அலி அதே ஷூவை அணிந்து செல்வதென்று முடிவு செய்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் ஷூவை தர ஓடி வருகிறாள் சாரா. அதை அணிந்து கொண்டு தன் பள்ளிக்கு ஓடுகிறான் அலி. தினம் தாமதமாக வருவதால் தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். ஆனால் அவன் நன்றாக படிப்பவன் என்பதால் வகுப்பு ஆசிரியர் அவன் தாமதமாக வந்தாலும் திட்டுவதில்லை. சாரா தன் பள்ளியில் தன் ஷூவை வேறு ஒரு பெண் அணிந்திருப்பதை கவனிக்கிறாள் . அவளது வீட்டுக்கு அலியும் சாராவும் சென்று பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை விட மிக ஏழ்மையில் இருப்பதை பார்த்து ஷூவை கேட்காமல் திரும்புகிறார்கள்.

ஒரு பக்கம் தாமதமாக போவதால் திட்டும் தலைமை ஆசிரியர் மறுபுறம் ஷூ லூசா இருக்கு என் ஷூ வேண்டும் என கேட்கும் தங்கை சாரா. அவளுக்கு புது ஷூ வந்தால் தான் இந்த பிரச்சனை சரியாகும் என உணர்கிறான் அலி.

அந்த ஊரில் ஒரு மிக பெரிய ஓட்ட பந்தயம் நடக்கிறது. அதில் மூன்றாம் பரிசுக்கு ஒரு ஜோடி ஷூ பரிசு என்பது தெரிந்து போட்டியில் கலந்து கொள்கிறான்.

நூற்று கணக்கான சிறுவர்கள் ஓட, எவ்வளவோ பார்த்து பார்த்து மூன்றாம் இடம் தான் வர வேண்டும் என ஓடினாலும் கடைசி நிமிட பரபரப்பில் எந்த இடம் வந்தோம் என்றே தெரியாமல் அலி கேட்கிறான் " சார் நான் மூணாம் இடம் வந்துட்டேன் இல்ல?" "இல்லடா நீ தான் முதல் இடம்" என்று அவன் ஆசிரியர் சொல்ல, அலி கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. பரிசு மீது விருப்பம் இன்றி அந்த ஷூவையே பார்த்த படி நிற்கிறான் அலி. படத்தின் முடிவில் அலியின் தந்தை கடையில் இரு புது ஜோடி ஷூ (அலிக்கும் சேர்த்து !) வாங்கி வருவதாக காண்பிக்க, கால் முழுதும் காயமான அலியின் கால்களை அவன் வளர்க்கும் மீன்கள் கவ்வுவதுடன் படம் நிறைவடைகிறது.
**
படத்தில் நம் மனதை அதிகம் கவர்வது அலியாக வரும் சிறுவன் தான். குடும்பம் இருக்கும் நிலையை உணர்ந்ததால் சின்ன வயதிலேயே பெரியவனுக்கு உரிய பார்வையும், நடவடிக்கையும் அவனுக்கு வந்து விடுகிறது. பெரியவர்கள் கவலைக்குள்ளும், உலகுக்குள்ளும் அவன் இளம் வயதிலேயே தள்ளப்படுகிறான். அவன் பார்வையிலேயே பரிதாபமும் இயலாமையும் தெரிந்து விடுகிறது. தான் ஷூ தொலைத்ததை சொல்லாதே என்று தனது நல்ல பென்சிலை தங்கைக்கு தருகிறான். பின் தன் ஆசிரியர் பரிசளித்த நல்ல பேனாவையும் தங்கைக்கே தருகிறான். இறுதி காட்சியில் அவன் ஓடும் போது என்ன ஒரு இயல்பான நடிப்பு. குறிப்பாக ஓட்ட பந்தயத்தில் அந்த கடைசி lap- அதில் இருக்கும் வலி, கிட்ட தட்ட சக்தி முழுதும் இல்லாமல் ஓடும் முக, உடல் பாவம் அருமையாக காட்டுகிறான். முதல் இடம் பெற்ற பின் போட்டோ எடுப்பவர் இவனை போட்டோ பிடிக்க, அவன் அழுது கொண்டிருப்பது .. மனதை நெகிழ்த்தும்.

ஏழ்மையிலும் நன்கு படிப்பவன், குடும்ப கஷ்டம் உணர்ந்தவன், தங்கை மேல் பாசம் கொண்டவன் என மிக நல்ல பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் மசூதியில் ஏராளமான ஷூக்களையும் அங்கு அப்பாவிற்கு உதவும் அலியையும் காண்பிக்கிறார்கள். அவன் நினைத்தால் நிச்சயம் இன்னொரு ஷூவை திருடி இருக்கலாம் என சொல்லாமல் சொல்லும் காட்சி இது. போலவே இந்த நிலையிலும் ஷூ யாரிடம் போனதோ அவர்கள் நம்மை விட பரிதாபமானவர்கள் என விட்டு கொடுக்கும் காட்சியில் அலி, சாரா இருவருமே நம் மனதில் உயர்ந்து விடுகிறார்கள்.

சாரா.. அடடா என்ன அழகு ! முதல் ஷாட்டில் வெள்ளந்தியாய் அவள் சிரிப்பதிலேயே மனதை பறி கொடுத்து விடுகிறோம். சிறுமி ஆனாலும் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இவள் தான் வீட்டு வேலை நிறைய செய்கிறாள் என காட்டுவது சமூகத்தில் பெண்கள் தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என இருப்பதை உணர்த்துகிறது. அண்ணனின் லூசான ஷூவை போட்டு கொண்டு அவள் நடக்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. கடை தெருவில் ஷூ கடையை பார்த்து கொண்டே நிற்பதாகட்டும் பள்ளி ப்ரேயரில் கூட பிற பெண்களின் கால்களையே பார்த்து கொண்டு நிற்பதாகட்டும், அண்ணனிடம் கோபித்து கொண்டு பேசாமல் திரும்பி கொள்வதாகட்டும் சாரா நடிப்பில் அசத்தி விடுகிறாள். இறுதி காட்சியில் முதலிடம் பெற்று விட்டதால், ஷூ கிடைக்க வில்லையே என மனம் நொந்து குற்ற உணர்வுடன் அண்ணன் வர, அவன் முகத்தை பார்த்தே அவன் பரிசு வெல்ல வில்லை என புரிந்து கொண்டு ஏதும் கேட்காமல் செல்லும் சாரா.. நீண்ட நாள் நினைவில் இருப்பாள்.

படத்தின் அரிதான காட்சிகளில் ஒன்று அலியும் சாராவும் ஷூவை சோப் போட்டு கழுவும் காட்சி. சிறுவர்களுக்கே உரித்தான விளையாட்டு தனத்துடன் நுரையுடன் விளையாடுவதாக இந்த காட்சி இருக்கும்.

இயக்குனர் மஜீத்
படத்தில் இந்த இரு பாத்திரங்கள் தான் முழுக்க முழுக்க ஆட்சி செய்கின்றன. இத்தகைய அற்புத படத்தை தந்த இயக்குனர் மஜீதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இரான் நகர தெருக்கள் மிக இயல்பாக படத்தில் வருகின்றன. குறிப்பாக தெருக்களின் நடுவே ஓடும் கால்வாய்கள், அதில் ஓடும் சாக்கடை தண்ணீர். முதலில் இருந்தே இந்த கால்வாயை கவனித்து வந்தேன். ஒரு முறை சாரா அணிந்திருக்கும் லூசான ஷூ கழன்று அந்த கால்வாயில் விழுந்து விட, தண்ணீரில் ஷூவை பார்த்தவாறே அவள் ஓடும் போது நாமும் கூட ஓடுகிறோம்.

இந்த காட்சியை முடித்த விதத்தில் நிச்சயம் ஒரு செய்தி உள்ளது. ஷூ ஒரு இடத்தில போய் மாட்டி கொள்ள அழுதவாறு நிற்கிறாள் சாரா. அப்போது ஒரு வயதானவர் வந்து என்ன விஷயம் என கேட்டு பெரிய குச்சி மூலம் அந்த ஷூவை எடுக்கிறார். நிறைய விஷயம் புரிய வைக்கும் காட்சி இது. ஷூ அப்படி மாட்டி கொண்டது சாரா என்கிற சிறு குழந்தைக்கு பெரிய பிரச்சனை. ஆனால் அவளை விட பெரியவர் அதை எளிதாய் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடுகிறார். நமது பிரச்சனைகள் சிலவற்றுக்கும் கூட இது பொருந்தும் ! சொல்லப் போனால், ஷூ தொலைத்ததை பெற்றோரிடம் சொல்லி இருந்தால், அவர்கள் எப்படியோ அந்த பிரச்னையை ஒரு சில நாட்களில் சரி செய்திருப்பார்கள். அந்த சிறுவர்கள் செய்த தவறு அதை சொல்லாதது தான். ஆனால் அவர்களுக்கு அவ்வயதில் இருக்கும் பயமும், பொய் சொல்வதும் இயல்பான ஒன்றே.

1997-ல் வெளி வந்த இந்த படம் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்து, ஆர்ட் பிலிம் வசூலில் சிறக்காது என்ற கூற்றை உடைத்தது. ஆஸ்கருக்கு நியமனம் செய்யபட்டாலும் ஆஸ்கர் பரிசு கிடைக்க வில்லை. ஆனால் பல்வேறு நாடுகளில் நடந்த சினிமா விழாக்களில் ஏராளமான பரிசுகள் பெற்றது. தலை சிறந்த குழந்தைகள் படத்துக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது இப்படம் ! இந்த படம் மறைந்த என் தங்கையை ஞாபகபடுத்துகிறது.

இந்த படம் பார்த்த அன்று என் கனவில், சாலை நடுவே கால்வாய் ஓடும் இரான் நகர தெருக்களில் செருப்பின்றி நடந்தேன். படம் தந்த பாதிப்பு !! உங்களை இந்த படம் வேறு விதமாய் நிச்சயம் பாதிக்கும். அவசியம் பாருங்கள் இந்த சொர்க்கத்தின் குழந்தைகளை !

Friday, April 19, 2013

RAW என்ன செய்கிறது ?

இந்திரா காந்தி புன்னியத்தில் உளவுத்துறை உருவாகிவிட்டது. 'ரா' என்று அழகிய நாமகரனமும் சூட்டிவிட்டார்கள். அவர்களுக்கு என்ன வேலை ? என்ன நோக்கங்கள், கொள்கைகள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றையும் வரைமுறைப்படுத்த வேண்டுமே ! மனித உயிர்களை கொள்ளும் தீவிரவாத இயக்கமே கொள்கையோடு இயங்கும் போது ஒரு நாட்டை பாதுகாக்கும் பொருப்பில் இருக்கும் உளவுத்துறை செயல்பாடுகள் எப்படி இருக்கும் ? பாதுகாப்பில் மட்டுமல்லாமல் எதிர் நாட்டை உளவு பார்க்கும் வேலையில், திட்டம் மிகவும் அவசியம்.

‘ரா’வின் செயல்பாடுகளைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

ராவின் முக்கிய வேலைகள்

1. அண்டை நாடுகளில் நிகழும் - அரசியல், ராணுவ மாற்றங்களைக் கண்காணிப்பது.
2. சர்வதேச கம்யூனிசத்தின் வளர்ச்சியை கண்காணிப்பது. அந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள்ள தொடர்புகளைக் கண்காணிப்பது.
3. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ராணுவம் நவீன ஆயுதங்களை கண்காணிப்பது. ஏதாவது புது ஆயுதம் வாங்குவதாக தகவல், அதன் ரிஷிமூலத்தை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் ஆராய வேண்டும்.
4. சர்வதேச நாடுகளில் வாழும், இந்திய சமூகத்தினைப் பயன்படுத்தி, அந்த நாடுகளில் கருத்துருவாக்கம் மற்றும் அரசியல் அழுத்தங்களை உருவாக்குதல்.

உலகில் எந்த ஒரு உளவு நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலும், அவர்களுக்கு பயிற்சி அளிக்க முதலில் அணுகுவது அமெரிக்க அண்ணனின் ‘சி.ஐ.ஏ’ என்பது மாற்றப்படாத விதி. அடுத்து பயிற்சிக்கு தொடர்பு கொள்வது அமெரிக்காவின் தம்பி இஸ்ரேலின் உளவு நிறுவனமான ‘மோஸாட்’. அதே விதியை தான் ரா விஷயத்திலும் பின்ப்பற்றப்பட்டது.




ராவில் பணியாற்றுபவர்கள் அமெரிக்கா, இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்கள். ‘ரா’ வின் தலைமை அமைச்சரவை செயலாளருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அமைச்சரவை செயலாளர் பிரதமருடன் தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும், ஒவ்வொரு நாளும் – ‘ரா’ செயலாளர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகருடன் தொடர்பு கொண்டு செயல்பட்டு வருகிறார்.

இரண்டு சிறப்பு செயலாளர்கள் மற்றும் ஒரு சிறப்பு இயக்குனரின் கீழ் ‘ரா’வின் விமான ஆய்வு மையங்கள் இயங்குகின்றன. பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நான்கு கூடுதல் செயலாளர்களின் நிர்வாகத்தின் கீழ் விடப்பட்டுள்ளன. பல்வேறு தலைப்புகளின் கீழ் ‘ரா’ பிரச்சினைகளை கையாளுகிறது.

புது டெல்லி மட்டுமல்லாமல் வேறு பல இடங்களிலும் ‘ரா’விலும் மண்டல தலைமையகங்கள் உண்டு. சர்வதேச நாடுகளில், ரகசியமாக தகவல்கள் திரட்டி அனுப்பும் வேலைகளை கள அதிகாரிகளும் மற்றும் அவர்களது உதவியாளர்களும் கவனித்து வருகிறார்கள். திரட்டப்பட்ட தகவல்கள் இறுதியாக, ‘ஆய்வு அதிகாரிகளின்’ பார்வைக்கு வரும். திரட்டப்படும் தகவல் சரிபார்த்து, உண்மையானதா என்பதை உறுதி செய்துக் கொண்டு பிறகு அதற்கான செயல் திட்டங்கள் இறங்குவார்கள்.

என்ன தகவல் திரட்டுகிறார்கள் ?

தகவல் சேகரிப்பு : இந்தியாவின் நலன் தொடர்பான தகவல்கள் – முறையான வழிகளிலும், முறைகேடான வழிகளிலும் திரட்டப்படுகிறது.

தகவல் பகுப்பு : சேகரிக்கப்பட்ட தகவல்கள் – தலைப்பு வாரியாக பகுக்கப்பட்டு, கணினி வழியாக பதிவு செய்யப்படுகின்றன. புதுடில்லியிலுள்ள குண்டு துளைக்காத 13 அடுக்கு தலைமையகத்தில், இதற்கென்று தனித்தளம் உண்டு.

அதிரடி நடவடிக்கைகள் : உளவு பார்த்தல், கவிழ்ப்பு நடவடிக்கைகள், சதித் திட்டம், கலகக் குழுக்களை உருவாக்குதல் ஆகியவையும், ‘ரா’வின் செயல்பாடுகள் ஆகும்.

ஊடுருவல் : எதிரிகளின் உளவு நிறுவனங்களில் ஊடுருவி செயல்படும் முறையையும் ‘ரா’ பின்பற்றி வருகிறது. ஒரு காலத்தில் ‘ரா’ நிறுவனத்தின் முக்கிய பணியாக ‘ஊடுருவல்’ கருதப்பட்டது. ‘ரா’ உளவு நிறுவனங்களிலிருந்து பல முக்கிய அதிகாரிகள் வேறு நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கு தாவி விடுவது அதிகரித்து வருவதால், ‘ஊடுருவல்’ வேலைகளை இப்போது அதிகமாக ‘ஐ.பி’ மேற்கொண்டு வருகிறார்கள். 

( அண்மைக்காலமாக ‘ரா’ நிறுவனம், பாகிஸ்தானை விட சீனாவிடமிருந்து தகவல்களை திரட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.)

 ‘ரா’ உளவு நிறுவனத்தின் உளவாளிகள் – தூதரகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்களான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைத் தளமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். ஆப்கானின் “காட்” (KHAD), இஸ்ரேலின் மொஸாத் அமெரிக்காவின் சி.ஐ.ஏ ஆகிய உளவு நிறுவனங்களோடு தொடர்பு கொண்டும் செயல்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட உளவு நிறுவனங்கள் – பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கைகளையும், அது தொடர்பான செயல்பாடுகளையும் கண்காணிப்பதும் ஒத்த கருத்துள்ளவையால் அவர்களின் ஆதரவு ‘ரா’ வுக்கு உண்டு.

ஆப்கானிஸ்தான், பிரிட்டன், ஹாங்காங், மியான்மர், சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தளமாகக் கொண்டு, தீவிரமாக ‘ரா’ உளவு நிறுவனம் செயல்படுகிறது. தங்களது உளவு வேலைகளுக்கு, உள்ளூர் பகுதிகளிலிருந்தும் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். மது, மங்கை, பணம் போன்ற பலவீனங்களையும் பயன்படுத்தி, தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மிரட்டியும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இனம் , பிரிவு, பிரிந்து போகும் கொள்கை போன்ற உணர்வு ரீதியான பிரச்சனைகளை முன்வைத்து பணிபுரிவோரின் பலவீனங்களுக்கு தீனி போட்டு தகவல்கள் சேகரிக்கப்படுகிறது.

இதை எல்லாம் செய்வதால் ரா கெட்ட நிறுவனமோ, மக்களுக்கு எதிரான அமைப்போ இல்லை. எல்லா அரசு நிறுவனம் போல் ரா உளவு அமைப்பும் இந்திய நாட்டு மக்களுக்கான உருவாக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காக தங்கள் உயிரை பணயமாக வைத்து, அந்நிய நாட்டை உளவு பார்த்து தகவல் திரட்டியிருக்கிறார்கள். அந்நிய நாட்டில் இவர்கள் மாட்டிக் கொண்டால், இந்தியாவுக்கும் இவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று இந்தியாவும் மறுத்திருக்கிறது. இராணுவ சிப்பாய்க்கு கிடைக்கும் இறுதி மரியாதைக் கூட நாட்டு பாதுக்காக்க தகவல் சேகரிக்கு உளவாளிக்கு கிடைப்பதில்லை.

பிரதமர், அமைச்சர்களின் கருத்துக்கு இவர்களின் செயல்பட வேண்டி இருப்பதாலும், அவர்களின் கருத்தை பிரதிபலிக்கும் தகவலை திரட்ட வேண்டியிருப்பதால் அரசியல்வாதிகள் மேல் இருக்கும் கோபம் இவர்கள் மீதும் வருகிறது.

பண்டைய காலத்திலும் சரி, தற்காலத்தில் சரி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் உளவுத்துறை மிகவும் முக்கியம். அதற்கான பணியில் ‘ரா’ உளவு நிறுவனம் மிகவும் அவசியம். ஆனால், முழுமையாக மக்கள் பாதுகாப்புக்கு செயல்படுகிறதா ? என்பதை வரும் அத்தியாயங்களின் பார்ப்போம்.
உதவிய நூல்

விடுதலை க.ராசேந்திரன். எழுதிய "ஈழப் பிரச்சனையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி" பின் சேர்கை கட்டுரை.